முகப்பு நிறுவனரைப் பற்றி நூல்கள் அணுகவும்
 
   
  நிறுவனரைப் பற்றி
 
 
திரு. ராஜம்
 
அமரர் இராஜம் அவர்கள் 22.11.1904 இல் பிறந்தார். நல்ல கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கினார். பின் அவர் பட்டயக் கணக்கர் ஆனார். பின்னர், அவர் தம் சகோதரருடன் மர்ரே அண்டு கம்பெனி என்னும் ஏல நிறுவனத்தின் பங்குதாரர் ஆனார். சிறிது காலத்திற்குப் பின் தாமே மர்ரே கம்பெனியின் தனித்த உரிமையாளராகி முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாக விளங்கிய காரணத்தால் மர்ரே ராஜம்என்ற பெருமைக்குரிய பெயராலேயே அவர் அழைக்கப் பெற்றார்.

திருராஜம் அவர்கள் பள்ளிப் பருவத்திலேயே தமிழ் மொழியிடம் சிறந்த ஈடுபாட்டை வளர்த்துக் கொண்டவர். அம் மொழியின் சிறப்பு அம்சங்கள் அவரைப் பெரிதும் கவர்ந்து கொண்டன. அமரர் உ.வே.சாமிநாதய்யர் அவர்கள் ராஜம் அவர்களுக்கு முன்மாதிரியாகத் திகழ்ந்தார். ராஜம் அவர்கள் சாமிநாதய்யரிடம் பெரு மதிப்புக் கொண்டு அவரைப் பலவாறு புகழ்ந்து பாராட்டியுள்ளார். தமிழ்மொழிக்கு உரிய முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை என்ற கவலை கொண்ட திரு. ராஜம் அவர்கள் தமிழ் இலக்கியங்களைச் சிறப்பான முறையில் பதிப்பித்து, ஏழை எளியவர்களுக்கும் அந் நூல்கள் எளிதாகக் கிடைக்கும் வகையில் பெருந்தொகையை நன்கொடையாக அளித்து விற்பனைக்கு வழங்கினார். திரு. சா. கணேசன், திரு. எஸ்வையாபுரிப்பிள்ளை, திரு. கந்தசாமிப்பிள்ளை, திரு. பெ..அப்புசாமி, திரு. தெ.பொ. மீனாட்சிசுந்தரம்பிள்ளை, திரு. அ.ஞானசம்பந்தன், திரு. பி.ஸ்ரீ. ஆசார்யா, திரு. எம்.வீ. வேணுகோபால்பிள்ளை, திரு. கி.. செகந்நாதன், திரு. வி.முசுப்பிரமணிய அய்யர் முதலான தமிழ்ப் பேரறிஞர்கள் திரு. ராஜம் அவர்களுக்கு ஊக்கமளித்து அவர் முயற்சி வெற்றி பெற உதவி செய்தனர். அவர் 1955 இல் தமிழ் இலக்கியச் செல்வம்என்ற பெயரில் தொடர்ந்து தமிழ் இலக்கியங்களைப் பதிப்பிக்கத் தொடங்கினார். அதனத் தொடர்ந்து, மேற் குறிப்பிட்ட பேரறிஞர்களின் ஊக்கத்தினால் முதலாயிரம், திருவாய்மொழி, இயற்பா, பெரிய திருமொழி, திருவாசகம், சிலப்பதிகாரம், மணிமேகலை,  கல்லாடம் அஷ்டப்பிரபந்தம் பத்துப்பாட்டு எட்டுத்தொகை,  பதினெண்கீழ்க்கணக்கு, பாட்டும் தொகையும், பத்துச் சிறுநூல்கள், கம்பராமாயணம்வில்லிபாரதம், தொல்காப்பியம் ஆகிய சிறந்த பழைய தமிழ் இலக்கியங்களைப் பதிப்பித்தார். இந்த நூல்களைப் பதிப்பிப்பதற்குப் பெருந்தொகை செலவான போதிலும், இந் நூல்கள், சமூகத்தின் அனைத்து மக்களுக்கும் கிடைக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடு திருராஜம் அவர்கள் ஒரு புத்தகம் ஒரு ரூபாய் என்ற அளவிலேயே விற்பனை செய்தார்.