திரு. ராஜம் அவர்களின் சிந்தனையில் பூத்த மலர்தான் சாந்தி சாதனா என்னும் நிறுவனம். நூல்கள், பழைய இலக்கியங்கள், மற்றும் பிற இலக்கியங்களைப் பதிப்பித்தலின் வழியாகத் தமிழ் அறிவையும் கல்வியையும் பண்பாட்டையும் பரப்ப வேண்டும் என்ற அடிப்படை நோக்கத்தோடு திரு. ராஜம் அவர்களால் 1957 ஆம் ஆண்டு இந்த நிறுவனம் ஏற்படுத்தப்பட்டது.

சாந்
தி சாதனா நிறுவனத்தின் பிற நோக்கங்களாவன:

நூல்நிலையங்கள், கல்வி மற்றும் ஆராய்ச்சி நிலையங்களை நிறுவுதல், மற்றும் அவற்றுக்கு உதவுதல், ஏழ்மை நிலையிலுள்ள தகுதிவாய்ந்த மாணவர்களுக்குத் தம் கல்வியையும் பயிற்சியையும் தொடர உதவி வழங்குதல் என்பனவாகும்.

இந்த நிறுவனத்தோடு அக்காலத்துத் தலைசிறந்த தமிழ் அறிஞர்களான திரு. எஸ். வையாபுரிப்பிள்ளை, திரு. தெ.பொ. மீனாட்சிசுந்தரம்பிள்ளை, திரு. கந்தசாமிப்பிள்ளை, திரு. பெ.. அப்புசாமி, திரு. பி.ஸ்ரீ.ஆசார்யா, திரு. சா. கணேசன், திரு... ஞானசம்பந்தன், திரு. எம். வீ.வேணுகோபால் பிள்ளை, திரு. கி..ஜெகந்நாதன், திரு. வி.மு.சுப்பிரமணியஅய்யர், முதலியவர்களோடு பிற அறிஞர்கள் பலரும் தம்மை ஈடுபடுத்திக் கொண்டு இந்நிறுவனத்தின் நோக்கங்களைச் சிறப்புடன் வளர்த்து வருவதில் பேருதவி புரிந்துள்ளனர்.

திரு ராஜம் தம் வாழ்நாள் முழுதும் இந்த நிறுவனத்தின் நோக்கங்களைச் சிறப்புற நிறைவேற்றச் சோர்வின்றிப் பாடுபட்டார். மேலும் இந்நிறுவனத்திற்குப் பெருந்தொகையை நன்கொடையாக வழங்கினார். அவரது சிறந்த உதவியோடு பல நூல்கள் சிறப்பாகப் பிழையின்றி எளியவரும் புரிந்துகொள்ளும்படி பதிப்பிக்கப்பெற்றன. முதலாயிரம், திருவாய்மொழி, இயற்பா, பெரியதிருமொழி, திருவாசகம், சிலப்பதிகாரம், மணிமேகலை, கல்லாடம், அஷ்டப்பிரபந்தம், பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினெண்கீழ்க்கணக்கு, பத்துச் சிறுநூல்கள், பாட்டும்தொகையும், கம்பராமாயணம், வில்லிபாரதம், தொல்காப்பியம் என்னும் தமிழ் நூல்கள் இந்நிறுவனத்தால் பதிப்பிக்கப் பெற்றவற்றுள் சிலவாகும்.

கணினி மற்றும் நவீன தொழில் நுட்பம் இல்லாமல் அச்சுக் கோத்தல் மூலமாகவே ஒரு பிழையுமின்றிச் சிறப்பாகப் பதிப்பிக்கப்பெற்ற இந்நூல்கள் பலராலும் உயர்வாகப் பாராட்டப் பெற்ற பெரு வெற்றியாகும். இந் நிறுவனத்தால் பதிக்கப்பெற்ற இந் நூல்களுக்குத் தமிழ் மொழியைப் பரவலாக ஆக்கி வளர்க்க வேண்டும் என்னும் நோக்கத்தோடு மிக்க பணவுதவி செய்யப்பட்டது.

திரு ராஜம் அவர்களின் அடிச் சுவட்டைப் பின்பற்றியே இந் நிறுவனம் பல வேறு தமிழ்மொழி இலக்கியங்களைத் தொடர்ந்து பதிப்பித்து வருகிறது. இந்த நிறுவனம் ஆழ்ந்த ஆராய்ச்சி செய்து, முழுமையாக, விரிவான பல நூல்களைத் தற்போது பதிப்பித்துள்ளது. தமிழ் மொழியின் அளவிடற்கரிய பெருமையை உணர்ந்து கொள்ள மாணவர்களுக்கும், ஆராய்ச்சி மேற் கொள்பவர் களுக்கும் இந் நூல்கள் மிகச் சிறந்த வழிகாட்டியாய் அமையும்.